| ADDED : மே 04, 2024 11:45 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டம் சார்பில் பழத்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தோட்டத்தில் முந்திரி பழங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட தேசிய ஊரக வேலை உறுதி திட்ட உதவி அதிகாரி பரிமளா நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். உடன், பாலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசு மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், களப்பணியாளர் இருந்தனர். பழத்தோட்டம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், மேற்கொண்டு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விசாரணை நடந்தது. இதில், பாசன வசதிக்காக, கூடுதல் ஆழ்துளை கிணறுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடு செய்வதாக, உதவி திட்ட அதிகாரி பரிமளா தெரிவித்தார். மேலும், பாலாபுரம் துணைமின்நிலையம் அருகே மழைநீரை தேக்கி வைக்க பண்ணை குட்டைகள் ஏற்படுத்தவும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.