உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செங்குன்றம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி பயணியர் தவிப்பு

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி பயணியர் தவிப்பு

செங்குன்றம்:நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வரும் நிலையில், செங்குன்றம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி, பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் அவதிப்படுகின்றனர்.சென்னை, செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திர மாநிலம் ஆகியவற்றுக்கு, 160க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் கோயம்பேடு, மாதவரம் புறநகர் பேருந்து நிலையங்களில் இருந்து, செங்குன்றம் வழியாகவும், 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றின் வாயிலாக தினமும், 50,000த்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். அவர்கள் மூலம், அரசுக்கு வருவாய் கிடைத்தாலும், அவர்களுக்கான அடிப்படை வசதி, பாதுகாப்பான போக்குவரத்து கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. அங்குள்ள கட்டண கழிப்பறை, சுகாதாரமற்ற நிலையில், நோய் தொற்று மையமாகவும், குடிமகன்களின் மதுக்கூடமாகவும் மாறி உள்ளது. அதனால் பயணியர், குறிப்பாக பெண்கள் உள்ளே சென்று வர அஞ்சுகின்றனர்.செங்குன்றம் பேருந்து நிலையத்தின் வெளியே, திருவள்ளூர் மாவட்டம், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சென்று வரும் பேருந்துகள் நின்று செல்கின்றன. இந்நிலையில், ஜி.என்.டி., சாலையின் இருபக்கமும் பேருந்து நிழற்குடைகள் இல்லை.அதைத்தொடர்ந்து காய்கறி சந்தை, மொண்டியம்மன் நகர், பாடியநல்லுார் சிக்னல், புழல் மத்திய சிறை, அதன் எதிரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கதிர்வேடு, விநாயகபுரம், லட்சுமிபுரம், கொளத்துார் செந்தில் நகர், கொரட்டூர் 200 அடி சாலை வடக்கு சிக்னல், அம்பத்துார் கள்ளிக்குப்பம், சூரப்பட்டு என, 10க்கும் மேற்பட்ட இடங்களில், மாநகர பேருந்து நிறுத்தங்களுக்கான நிழற்குடை இல்லை.அங்கு, பேருந்துக்காக காத்திருப்போர், ஒதுங்கி நிற்க கூட இடமின்றி, கடும் வெயிலில் நின்று அவதிப்படுகின்றனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள் உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர். பயணியர் வாயிலாக, மாநகர போக்குவரத்து துறைக்கு, கணிசமான வருவாய் கட்டணமாக கிடைத்தாலும், பயணியரின் அடிப்படை வசதியான பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படுவதில்லை.ஒரு சில இடங்களில், 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, பராமரிப்பின்றி கிடக்கும் பேருந்து நிழற்குடைகள், சேதமடைந்து துருப்பிடித்து, முறிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே, வரும் ஜூன் மாதம் வரை, கடும் வெயில் நீடிக்கும் என்பதால், பயணியரின் நலனுக்காக, மாநகர போக்குவரத்து துறை, சேதமடைந்த நிழற்குடைகளை சீரமைத்தும், நிழற்குடை இல்லாத இடங்களில் உடனடியாக புதிய நிழற்குடைகளை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, பயணியர் கூறுகையில்,'செங்குன்றம் பேருந்து நிலையத்தை தரம் உயர்த்தாவிட்டாலும் பரவாயில்லை. நிழற்குடை, குடிநீர், சுகாதாரமான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையாவது மேம்படுத்தலாம். திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாநகர போக்குவரத்து துறையும், நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை