| ADDED : மே 12, 2024 09:05 PM
திருத்தணி: திருத்தணியில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சாலையோரம் வண்டிகளில் விற்கப்படும் குளிர்பானங்கள் மற்றும் கேழ்வரகு கூழ் அருந்துவதால் அவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளன. திருத்தணி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மார்ச் முதல் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்து பகல் நேரத்தில் வெயில் நாளுக்கு நாள் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை, 9:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை கொளுத்தும் வெயிலால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.திருத்தணி பழைய மற்றும் புதிய சென்னை சாலை, ம.பொ.சி.சாலை, சித்துார் சாலை மற்றும் அரக்கோணம் சாலை மற்றும் கமலா தியேட்டர் ஆகிய பகுதிகளில் ஆந்திரா மற்றும் வடமாநில இளைஞர்கள் தள்ளுவண்டிகளில் எலுமிச்சை சாறு, நன்னாரி, சர்பத் மற்றும் சோடாவை விற்பனை செய்கின்றனர். எலுமிச்சை சாறு, சாத்துக்குடி சாறு, கரும்புச் சாறு போன்றவை 15 முதல், 40 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். அதேபோல 30க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகளில் கேழ்வரகு கூழ் விற்பனை, தர்பூசணி மற்றும் குளிர்பானம் விற்பனை செய்கின்றனர்.