| ADDED : ஆக 16, 2024 12:34 AM
திருத்தணி:திருத்தணி மேட்டுத்தெரு மற்றும் பஜார் பகுதி ஆகிய இடங்களில் தானியங்கி ரயில்வே கேட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இரண்டாவது ரயில்வே கேட்டான பஜார் கேட் வழியாக இரு சக்கர வாகனங்கள், கார் மற்றும் வேன் ஆகிய வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த கேட் வழியாக அரசு அலுவலகங்கள், அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட நகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மற்றும் மக்கள் நடந்து செல்கின்றனர்.இந்நிலையில், ரயில்வே கேட் பாதை சீரமைப்பு மற்றும் புதிதாக தண்டவாளங்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு இடையே பொருத்தப்படும் சிமென்ட் துாண்கள் அமைக்கும் பணிகள், கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகலாக நடந்து வருகிறது.இதனால், இரண்டாவது ரயில்வே கேட் வழியாக வாகனங்கள் செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி வரை ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், மேட்டுத் தெரு கேட் வழியாக மாற்று பாதையில் செல்லுமாறு, வாகன ஓட்டிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.