சென்னை:சென்னை அடுத்த தாம்பரத்தில், போலி ஆவணங்கள் வாயிலாக, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்ற கும்பலுக்கு உதவியதாக, தாம்பரம் சார் - பதிவாளர் மணிமொழியன், அவரது உதவியாளர் லதா உள்ளிட்டோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், கடந்த மாதம் கைது செய்தனர்.இந்நிலையில், ஜாமின் கேட்டு, மணிமொழியன், லதா ஆகியோர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது.லதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரரின் லாக்--.இன்., ஐ.டி., எனும் பயனர் கணக்கை சிலர் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மனுதாரருக்கு 'ஸ்கேன்' செய்ய தெரியாது. அவர், குறிப்பிட்ட அந்த காலக்கட்டத்தில் எந்த ஆவணத்தையும் 'ஸ்கேன்' செய்யவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன் தான் பணியில் சேர்ந்துள்ளார்,' என்றார்.மணிமொழியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் என்றால், அதை சார் பதிவாளர் அல்லது பதிவுத்துறை தலைவர் தான் மேற்கொள்ள முடியும். குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலக்கட்டத்தில், மனுதாரர் முதுநிலை உதவியாளராக தான் பணிபுரிந்துள்ளார்' என்றார்.மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, ''மனுதாரர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டதற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. மனுதாரர்களுக்கு ஜாமின் வழங்கினால், சாட்சிகளை மிரட்டுவர்; தலைமறைவாகி விடுவர்.''வழக்கில் தொடர்புடைய சிலர் தலைமறைவாக உள்ளனர். விரிவான விசாரணை நடந்து வருகிறது. மனுதாரர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது,'' என்றார்.இதை ஏற்று, இருவரின் ஜாமின் மனுவையும், நீதிபதி எஸ்.அல்லி தள்ளுபடி செய்தார்.