| ADDED : ஜூலை 26, 2024 02:53 AM
கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரபாகரன் தலைமையில், மணவாள நகர் காவல் ஆயவாளர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.இதில், சாலையோரம் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், மழைநீர் கால்வாய் பகுதியில் அமைக்கப்பட்ட வணிக நிறுனங்களுக்கான படிகள் உட்பட, நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள இடங்கள் மீட்கும் பணி நடந்தது. சில வணிக நிறுவனங்கள், தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். மேலும், இரண்டு ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.'வரும் காலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
2 மணி நேரம் காத்திருந்த போலீசார்
மணவாளநகர் பகுதியில் நேற்று நெடுஞ்சாலைத் துறையின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து மணவாளநகர் பகுதியில் ஆண், பெண் என, 20க்கும் மேற்பட்ட போலீசார், காலை 10:00 மணிக்கு வந்தனர். ஆனால், நெடுஞ்சாலைத் துறையினர் காலதாமதமாக மதியம் 12:00 மணிக்கு வந்தனர். இதனால், இரண்டு மணி நேரமாக போலீசார், நெடுஞ்சாலையோரம் காத்திருந்து கடும் சிரமப்பட்டனர்.