| ADDED : ஆக 16, 2024 11:20 PM
திருத்தணி : திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தலைமையில் நேற்று நடந்தது. தாசில்தார்கள் ராஜேஸ்வரி, சாந்தி, பொறுப்பு வேளாண் உதவி இயக்குனர் பிரேம் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.இதில் விவசாயிகள் பேசியதாவது: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தி, வெளிமாநில சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். கரும்பு வெட்டுவதற்கு கூலியாட்களை ஆலை நிர்வாகம் அழைத்து வரவேண்டும். விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்திற்கு சில துறை அதிகாரிகள், அலுவலர்கள் வருவதில்லை. விவசாயிகள் கூட்டத்தில் துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்றால் தான் விவசாயிகள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் மற்றும் பிரச்னை தீர்க்க முடியும். இனிவரும் கூட்டங்களில் துறை உயரதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மின்வாரிய துறையில், டிரான்ஸ்பாம் பழுதடைந்தால், அதை சரிசெய்வதற்கு, ஒரு விவசாயிடம், 1,500 ரூபாய் வீதம் மின்இணைப்பு பெற்றுள்ள அனைத்து விவசாயிகளிடம் மின்வாரிய ஊழியர்கள் கட்டாயமாக வசூலிக்கின்றனர். பணம் கொடுக்க மறுத்தால் டிரான்ஸ்பாம் பழுது பார்க்காமல் நாட்களை கடத்துகின்றனர்.மாவட்ட நிர்வாகம், விவசாயிகள் பயன்பாட்டிற்கு ஏரிகளில் மண் எடுத்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது. தற்போது தினமும் மழை பெய்து வருவதால் ஏரியில் மண் எடுக்க முடியாத நிலை உள்ளதால், மேலும் ஒரு மாதத்திற்கு கூடுதல் கால அவகாசம் கொடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.