| ADDED : ஏப் 17, 2024 11:26 PM
திருவள்ளூர்:கடம்பத்துார் அடுத்த பூண்டி ஒன்றியத்தில் திருப்பாச்சூர் ஊராட்சி உள்ளது. திருவள்ளூர் - கடம்பத்துார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஊராட்சி வழியாக, தினமும் அரசு, தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள் என, 1,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ஊராட்சியில் குப்பை சேகரிப்பதற்காக, ஊரக வளர்ச்சி துறை வாயிலாக குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த குப்பை தொட்டிகள் பயன்பாட்டிற்கு வராததால், ஊராட்சி அலுவலகம் அருகே காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளன. இதனால், பகுதிவாசிகள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை நெடுஞ்சாலையோரம் வீசி வருகின்றனர். இந்த குப்பை கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த குப்பையால் பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நெடுஞ்சாலையோரம் குப்பையை அகற்றவும், குப்பை தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.