| ADDED : மே 07, 2024 06:39 AM
திருவள்ளூர்: 'மின்மாற்றி' அமைத்து ஆறு மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராததால், கனகவல்லிபுரம் கிராமவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாண்டு ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள கனகவல்லிபுரம் கிராமத்தில், மின்தடையால் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, மின்வாரியத்தினர் அந்த கிராமத்தில் புதிதாக மின்மாற்றி அமைத்துள்ளனர்.மின்மாற்றி அமைத்து ஆறு மாதங்களாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. கிராமவாசிகள் மின்வாரியத்தில் கேட்டபோது, 'எம்.எல்.ஏ., வந்து திறந்து வைத்ததும், மக்கள் பயன்பாட்டிற்கு வரும்' என, அலட்சியமாக தெரிவித்துள்ளனர்.தற்போது, தேர்தல் நன்னடத்தை விதி அமலில் இருப்பதால், எம்.எல்.ஏ., வந்து திறந்து வைக்க முடியாத சூழல் உள்ளது.எனவே, கனகவல்லிபுரம் வாசிகளின் நலன் கருதி, இந்த மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.