| ADDED : மே 29, 2024 12:29 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பில், புகையிலை மற்றும் பான் மசாலா தடுத்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் முன்னிலை வகித்தார். கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் குட்கா மற்றும் பான் மசாலாவை விற்பனை செய்வதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அவ்வப்போது சில்லரை மற்றும் மொத்த விற்பனை செய்யும் கடைகளை கண்காணிக்க வேண்டும்.உணவு பாதுகாப்பு மற்றும் காவல் துறையினர் ஆய்வில், குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை கண்டறியப்பட்டால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன், 15 நாட்கள் கடைகளை மூட வேண்டும். இரண்டாவது முறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம், 30 நாட்கள் கடை மூடல், 3 வது முறை பிடிபட்டால், 90 நாட்கள் கடை மூடுவதுடன், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து குட்கா மற்றும் பான் மசாலா வருவதை தீவிரமாக கண்காணித்து முற்றிலும் தடுக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.கூட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.