கும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் இருந்து நெல்லுார், கூடூர், கும்மிடிப்பூண்டி, எழும்பூர், தாம்பரம் மார்க்கமாக செங்கல்பட்டு வரை சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.மூன்று மாதங்களுக்கு முன் அந்த எக்ஸ்பிரஸ் ரயில், ஞாயிறு, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், செங்கல்பட்டில் இருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது.அந்த மூன்று தினங்கள், மதியம் 1:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் சர்க்கார் எக்ஸ்பிரஸ், மாலை 6:40 மணிக்கு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் வந்தடைகிறது. அதேபோன்று, அதிகாலை 4:20 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து புறப்பட்டு காலை 9:50 மணிக்கு புதுச்சேரி சென்றடைகிறது.கும்மிடிப்பூண்டி - புதுச்சேரி இடையே சென்னை எழும்பூர், மாம்பழம், தாம்பரம், செங்கற்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம் ஆகிய ஆறு ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றது.தொழில் நகரமான கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மேல்மருவத்துார், விழுப்புரம், புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.பயண நேரம் மற்றும் பண விரயத்தை குறைக்கும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, கும்மிடிப்பூண்டி பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆகையால், வாரத்தில் மூன்று தினங்கள் இயக்கப்படும் அந்த எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும் என ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.