| ADDED : ஆக 19, 2024 11:09 PM
சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்டது பில்லாஞ்சி. இந்த பகுதியில், 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பில்லாஞ்சி ஏரியின் உபரிநீர் கால்வாய், திடீர் நகர் வழியாக பாய்ந்து சென்று சோளிங்கர் ஏரியின் உபரிநீர் கால்வாயில் கலக்கிறது. இந்த கால்வாய் முறையாக துார் வாரி சீரமைக்கப்படாததால், திடீர் நகரில் ஆறாக தேங்கி நிற்கிறது. இதனால், இந்த பகுதியில் வசிப்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். உபரிநீர் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால், இதில், கோரை புற்கள் 10 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன.கழிவுநீர் வெளியேற வழியின்றி, ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தற்போது தேங்கி நிற்கிறது. சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர், வாகனங்களால் சிதறடிக்கப்பட்டு வருகிறது. இதனால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமலும், வாகன ஓட்டிகள் எதிர் திசை சாலையிலும் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விபத்து அபாயம் நிலவுகிறது. நகராட்சி நிர்வாகம், கழிவுநீரை முறையாக அகற்றவும், வரத்து கால்வாயை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.