| ADDED : மே 23, 2024 11:42 PM
திருவள்ளூர், சென்னையின் தாகம் தீர்க்கும் பூண்டி நீர்த்தேக்கத்தில், தண்ணீர் அளவு குறைந்துள்ள நிலையில், இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் மீன் பிடித்து வருகின்றனர்.சென்னை நகரின் தாகம் தீர்க்கும் பூண்டி நீர்த்தேக்கத்தில், 3.21 டி.எம்.சி., அளவிற்கு தண்ணீர் சேகரிக்கலாம். தற்போது, மழை வரத்து இல்லாததாலும், கிருஷ்ணா நீர் வரத்தும் இல்லாத நிலையில், நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது. தற்போது, 0.51 டி.எம்.சி., அளவிற்கே தண்ணீர் உள்ளது. மேலும், சென்னை நகருக்கு பிரதான கால்வாயில் இருந்து, தினமும் 287 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.இந்த தண்ணீர், புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு, பின் சென்னை நகருக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், புழல் ஏரிக்கு நீர் திறக்கப்படும் மதகு அருகில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் மீன் பிடித்து வருகின்றனர். ஏற்கனவே, பலமுறை இவ்வாறு மீன் பிடித்த இளைஞர்கள் தடுமாறி நீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.எனவே, பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையினர் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் இளைஞர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.