| ADDED : ஜூன் 29, 2024 02:04 AM
ஆர்.கே.பேட்டை:அரசு பள்ளிகளில் காய்கறி மற்றும் மூலிகை தோட்டம் அமைப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அனைத்து அரசு பள்ளிகளிலும் தோட்டம் கட்டாயம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, காய்கறி மற்றும் மூலிகை செடிகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் பள்ளி சமையலறையை ஒட்டி, இந்த தோட்டங்கள் அமைக்கப்படுகின்றன.சமையலறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தோட்டத்தின் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த தோட்டங்களில் விளையும் காய்கறி, அதே சமையலறையில் மாணவர்களின் சத்துணவுக்காக பயன்படுத்தப்படுகிறது.ஆர்.கே.பேட்டை அடுத்த அய்யனேரி உயர்நிலைப்பள்ளியில் பயிரிடப்பட்ட காய்கறிகள், சத்துணவுக்கு அளிக்கப்பட்டது குறித்து நம் நாளிதழில் ஏற்கனவே செய்தி வெளியாகியுள்ளது.ஆர்.கே.பேட்டை அடுத்த காட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியிலும், பள்ளி சமையலறையை ஒட்டி, மாணவர்கள் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர்.இயற்கையான சூழலில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், இயற்கை உரம் இட்டு, மாணவர்கள் இந்த தோட்டத்தில் பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் மூலிகை செடிகளை பராமரித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, சமையலறை கழிவுநீர் தேங்கி நிற்கும் இடத்தில், எந்நேரமும் மூலிகை வாசம் வீசுவது மாணவர்களின் உழைப்புக்கு அடையாளம்.