| ADDED : மே 02, 2024 08:07 PM
அரக்கோணம்:ஆந்திர மாநிலம், விஜயவாடா ராஜிவ் நகரை சேர்ந்தவர் சுசிலா, 64; இவரது மகன் பவுன் குமார், 43. இருவரும் மார்ச் 27-ம் தேதி அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் புறநகர் ரயிலில் சென்றனர்.ரயில் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டதும் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் சுசிலா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்றார்.இது குறித்து பவன்குமார் அரக்கோணம் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை அரக்கோணம் ரயில் நிலையம் மற்றும் நடைமேடைகளில் இன்ஸ்பெக்டர் வடிவுகரசி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது நடைமேடையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் சென்னை ஆவடி காமராஜ் நகரை சேர்ந்த ராஜேந்திரன், 47, என்பதும் அரக்கோணம் புறநகர் ரயிலில் சென்ற சுசிலாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து 3 சவரன் செயினை பறிமுதல் செய்து கைது செய்தனர்.