பார்க்கிங் ஏரியாவாக மாறியது ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயில்
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுற்றுவட்டாரத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தினமும் 150க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் தங்கள் உறவினர்களை அழைத்து வந்து சிகிச்சை பெற்று செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்த இருசக்கர வாகனங்களை ஆரம்ப சுகாதார நிலையத்தின் நுழைவாயிலில் நிறுத்திவிட்டு சிகிச்சை பெற செல்கின்றனர். இவ்வாறு வாகனங்களை நிறுத்துவதால், அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோவில் வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணியர் உள்ளே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.மேலும், அவசர சிகிச்சைக்காக வருவோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, கனகம்மாசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன், வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.