பொன்னேரி: பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சிதிலம் அடைந்ததை தொடர்ந்து, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.கடந்த 6ம் தேதி, கணபதி ஹோமம், முதல் யாகசாலை சாலை பூஜைகளுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம், இரண்டாம் யாகசால பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்டவை நடந்தன.நேற்று காலை, 6:15 மணிக்கு, கலசம் புறப்பாடும், 6:45 மணிக்கு மங்கள இசையுடன் கோவில் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடந்தது.அதை தொடர்ந்து, வைத்தியநாசசுவாமி, தையல்நாயகி, காளத்தீஸ்வரர், விநாயகர், முருகர், பஞ்ச கோஷ்ட தேவதைகள், சண்டிகேஸ்வரர், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், நந்திபகவான், நாகதேவதை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.அப்போது கூடியிருந்த பக்தர்கள், 'ஓம்நமச்சிவாய, ஓம்நமச்சிவாய' என கோஷம் எழுப்பி வணங்கினர்.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, வைத்தியநாதசுவாமி மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. பழமையான கோவில் சிதிலம் அடைந்து, கிராமவாசிகளின் சொந்த முயற்சியால் பல ஆண்டுகளுக்கு பின், புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்திருப்பது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.