| ADDED : மே 12, 2024 09:38 PM
கும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநிலத்தில் உள்ள, 175 சட்டசபை தொகுதிகள், 25 லோக்சபா தொகுதிகளுக்கான பொது தேர்தல், இன்று ஒரே கட்டமாக நடக்கிறது.ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீஹரிகோட்டா அருகே பழவேற்காடு ஏரியின் மையபகுதியில் இருக்கம் தீவு அமைந்துள்ளது. அங்கு இருக்கம் மற்றும் இருக்கம் குப்பம் ஆகிய இரு இடங்களில் ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அந்த இரு ஓட்டுச்சாவடிகளில் மொத்தம், 1,144 வாக்காளர்கள் உள்ளனர்.அங்கு இன்று தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, நேற்று மாலை படகுகள் வாயிலாக ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் கருவிகள், வாக்குச்சாவடி உபகரணங்கள் எடுத்து செல்லப்பட்டன.ஆந்திர மாநிலம் தடா அடுத்த பீமுவார்பாளையம் கிராமத்தில் உள்ள படகுத்துறைக்கு நேற்று மாலை பேருந்து வாயிலாக ஓட்டுச்சாவடி உபகரணங்களுடன் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், போலீசார், துப்பாக்கி ஏந்திய மத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வந்து இறங்கினர். அங்கு காத்திருந்த இரு படகுகளில் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், உபகரணங்களை ஏற்றி சென்றனர். மீண்டும் நாளை மாலை ஓட்டுப்பதிவுக்கு பின் இயந்திரங்களை படகில் கொண்டு செல்ல உள்ளனர்.