உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீணாகி வரும் ஆழ்துளை கிணறு குடிநீர் தொட்டிகள்: சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு

வீணாகி வரும் ஆழ்துளை கிணறு குடிநீர் தொட்டிகள்: சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, 526 ஊராட்சிகளில், தலா 1 லட்சம் ரூபாய் மதிப்பில் 5.26 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு குடிநீர் தொட்டிகள், பயன்பாடில்லாமல் வீணாகி உள்ளது. இதற்கு சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என, பகுதிவாசிகள்குற்றம் சாட்டுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, 10 ஆண்டுகளுக்கு முன் 'தாய்' திட்டத்தில், தலா 1 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆழ்துளை கிணறுடன் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதை பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது ஆழ்துளை கிணறுகளில் போதிய நீர் இல்லாததால், பல ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆழ்துளை கிணறுகள் முறையாக அமைக்காததே காரணம் என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதாவது, ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி, பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைக்கப்படும் ஆழ்துளை கிணறுகளை ஒன்றிய அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊராட்சி பகுதிகளில், 200 அடிக்கு குறையாமல் ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும்.ஆனால், ஆழ்துளை கிணறுகளை அமைப்பதற்கு பணி எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் போது, தண்ணீர் வந்தவுடன் பணியை நிறுத்தி விடுகின்றனர். இதனால், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் குடிநீருக்கு பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது, சுட்டெரிக்கும் வெயிலில் குடிநீருக்கு கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு, ஒன்றிய அதிகாரிகள் ஆழ்துளை கிணறுகளை முறையாக ஆய்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, ஊராட்சி பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளை, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்கவும், புதிய ஆழ்துளை கிணறு குடிநீர் தொட்டி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி கூறியதாவது:கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் கலெக்டருடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தி, குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டுமென, உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கலெக்டர் உத்தரவின் பேரில், ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து, ஆழ்துளை கிணறு குறித்து கணக்கெடுத்து வருகிறோம். இதில், தற்போது தண்ணீர் வரும் நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு, குடிநீர் தொட்டிகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும், சில இடங்களில் மாற்று இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ