உயிர்பலி வாங்க காத்திருக்கும் சாலையோர திறந்தவெளி கிணறு
பொன்னேரி:சாலையோரத்தில் கம்பி வேலி அமைக்கப்படாமலும், திறந்த நிலையிலும் உள்ள கிணற்றால், கால்நடைகள் மற்றும் கிராம மக்கள் அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது.மீஞ்சூர் ஒன்றியம் கீரப்பாக்கம் கிராமத்தில், தேவம்பட்டு - புதுகுப்பம் சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் திறந்தநிலையில் கிணறு உள்ளது.இதில், தற்போது தண்ணீர் நிரம்பி இருக்கும் நிலையில், கிணற்றை சுற்றி எந்தவொரு பாதுகாப்பு கம்பியும், சுற்றுச்சுவரும் அமைக்கப்படவில்லை. இச்சாலை வழியாக பள்ளி செல்லும் மாணவர்கள், கிணற்றின் அருகே சென்றால் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.சாலையோர வளைவில் கிணறு அமைந்துள்ளதால், வாகனங்களும் விபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:திறந்தவெளியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் உறை கிணறுகளை வேலி அமைத்தும், மூடி வைத்தும் பாதுகாக்க, தமிழக அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆனால், அதிகாரிகள் அவற்றை கண்டுகொள்வதில்லை.எனவே, அசம்பாவிதங்கள் நேரிடும் முன், சாலையோர கிணற்றை சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும் அல்லது மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.