திருவள்ளூர்:திருவள்ளூர் லோக்சபா தனி தொகுதியில், கடந்த 2019ல் நடந்த தேர்தலில், 75.8 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவானது. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து நடத்தப்படும் லோக்சபா தேர்தலில், இந்த முறையாவது ஓட்டு எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.நம் நாட்டின் பிரதமரை தேர்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணையம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா முழுதும் பொது தேர்தலை நடத்தி வருகிறது. அலட்சியம்
கடந்த 1951 முதல் 2019 வரை, 17 பொது தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது, 18வது பொதுத்தேர்தல் ஏப்., 19ல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் 39, புதுச்சேரியில் ஒன்று என, 40 தொகுதிகளுக்கும், தி.மு.க., -அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.ஒவ்வொரு தேர்தலிலும்,அனைத்து வாக்காளர்களும் தங்களின் ஓட்டுகளை பதிவு செய்து, ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என, தேர்தல் ஆணையம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.இருப்பினும், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்பது, கானல் நீராகத்தான் உள்ளது. திருவள்ளூரில் நடந்த 17 லோக்சபா தேர்தலிலும், 80 சதவீதம் ஓட்டுப்பதிவு கூட கிடைக்கவில்லை.கடந்த 1951 தேர்தலில், 87.41 சதவீதமாக இருந்த ஓட்டுப்பதிவு, அதன்பின் படிப்படியாக குறைய துவங்கியது. கடந்த 2009, 2014 தேர்தலில்களில், ஓட்டுப்பதிவு சதவீதம் 72 சதவீதமாக இருந்தது. 2019ல் சற்று அதிகரித்து, 75.8 சதவீதமாக உயர்ந்தது.இருப்பினும், 90 சதவீதஓட்டுகள் கூட பதிவாகவில்லை. இம்முறை திருவள்ளூர் தொகுதியில் 20,58,098 வாக்காளர்கள் உள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஜனநாயக திருவிழா என கொண்டாடப்படும் பொது தேர்தலில், தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்வதில், வாக்காளர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், அரசியலை சேவையாக கருதி தேர்தலில் நிற்போர், தோல்வியை தழுவுகின்றனர். ஆனால், அரசியலை தொழிலாக நினைப்போர் பதவியில் அமர ஒரு வாய்ப்பாக அமைந்து விடுகிறது.பலர், தேர்தல் நடைபெறும் நாளன்று கிடைக்கும் விடுமுறையை, ஓட்டுப் போட பயன்படுத்தாமல், சுற்றுலா செல்லவும், வீடுகளில் ஓய்வெடுக்கவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். விழிப்புணர்வு
இந்த நிலை மாறி, வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், தங்களுக்கு நல்லது செய்வார் என நினைப்போரை தேர்வு செய்வதற்காக ஓட்டளிக்க வரவேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து கலெக்டர் பிரபுசங்கர் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், தற்போது நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், கடந்த முறை ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்த பகுதிகளில், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.வாகனங்கள் வாயிலாக, அனைத்து கிராமங்கள், மக்கள் கூடும் இடங்களான பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள் வாயிலாக, பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, தொகுதி முழுதும் வாகனங்களில் எடுத்துச் சென்று, மக்களிடம் எளிதாக ஓட்டு அளிக்கும் முறை குறித்தும் செயல் விளக்கம் அளித்து, வாக்காளர்களுக்கு மாதிரி ஓட்டுப்பதிவு முகாம் நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.முதியோருக்கு தபால் ஓட்டு
திருவள்ளூர் மாவட்டத்தில், 85 வயதை கடந்த முதியோர், அவர்களின் ஓட்டுகளை சிரமமின்றி செலுத்த, தபால் ஓட்டு அளிக்கப்பட உள்ளது. மாவட்டத்தில், 24,565 பேருக்கும், குறிப்பாக, திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் மட்டும், 14,199 பேருக்கும் தபால் ஓட்டு படிவம் நேரில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், காவல் துறையினருடன், புதிதாக செய்தி பணியில் ஈடுபடும் செய்தி துறையினருக்கும் தபால் ஓட்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற முயற்சி காரணமாக, இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.- பிரபுசங்கர்,மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர், திருவள்ளூர்
2019 ஓட்டுப்பதிவு விபரம்
ஆண்கள் 9,32,121பெண்கள் 9,50,286மொத்த வாக்காளர்கள் 18,82,738பதிவானவை 14,08,189 சதவீதம் 75.8