| ADDED : பிப் 15, 2024 02:23 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகரைச் சேர்ந்தவர் சரவணன், 34; ரவுடி. இவர், கடந்த நவம்பர் மாதம், சென்னை புழல் சிறையிலிருந்து கோட்டாட்சியர் நன்னடத்தை விதியின் கீழ் வெளியே வந்தார். தற்போது வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 6ம் தேதி இரவு தன் வீட்டருகே உள்ள அவ்வையார் தெருவில் ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது, ஆட்டோ தீவைத்து கொளுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், 7ம் தேதி அதிகாலை 12:06 மணிக்கு மர்ம நபர் ஒருவர், சரவணன் ஆட்டோவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, சாதாரணமாக நடந்து சென்றார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, தன் நண்பர் குமரன் என தெரியவந்தது. இதுகுறித்து சரவணன், மணவாள நகர் காவல் நிலையத்தில், எனக்கும், என் நண்பரான குமரனுக்கும் தகராறு ஏற்பட்டது. அதன் காரணமாக, குமரன் என் ஆட்டோவை தீயிட்டு கொளுத்தியதாக புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.