உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 220 ஏசி மினி பஸ் தயாரிப்பு பணி வடிவமைப்பு குறித்து ஆலோசனை

220 ஏசி மினி பஸ் தயாரிப்பு பணி வடிவமைப்பு குறித்து ஆலோசனை

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பிரதான பகுதிகளை இணைக்கும் வகையில், 220 புதிய 'ஏசி' மினி பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மினி பேருந்துகளுக்கான வடிவம் குறித்து, நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 20 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், பயணியர் தேவை அதிகமாக இருக்கிறது. மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் கூடுதல் மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிறுவனம், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு கோரிக்கை விடுத்தது. குறிப்பாக, ஆலந்துார், கிண்டி, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வழித்தடம் இடையே இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும், 100க்கும் மேற்பட்ட மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என பட்டியலையும் அளித்தது. இதற்கிடையே, மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 220 மின்சார 'ஏசி' மினி பேருந்துகள் தனியார் பங்களிப்புடன் இயக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நந்தனத்தில் நேற்று நடந்தது. இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரபுசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள், பேருந்து தயாரிப்பாளர்கள் ஏழு பேர் பங்கேற்றனர். மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், முக்கிய ரயில், பேருந்து நிலையங்கள், குடியிருப்புகள், தனியார் ஐ.டி., நிறுவனங்களை இணைக்கும் வகையில், மினி பேருந்துகள் இயக்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இதற்கிடையே, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 220 'ஏசி' மின்சார மினி பேருந்துகள் இயக்க உள்ளோம். முதல் முறையாக 5 - 6 மீட்டர் நீளமுள்ள மின்சார 'ஏசி' மினி பேருந்து இயக்க உள்ளதால், பேருந்தின் வடிவமைப்பு, பயணியருக்கான வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பேருந்து தயாரிப்பு நிறுவனத்தினர், தங்களது வடிவமைப்பை இறுதி செய்து, விரைவில் சமர்ப்பிப்பர். அதன்பின், இறுதி செய்து, 'டெண்டர்' வெளியிட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். பேருந்து வழித்தடம், கட்டண விபரங்கள் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ