உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரு சிறுவர்களை கடித்து குதறிய நாய்கள் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம்

இரு சிறுவர்களை கடித்து குதறிய நாய்கள் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம்

ஆர்.கே.பேட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஆர்.கே.பேட்டையில் நேற்று ஒரே நாளில் இரண்டு குழந்தைகளை நாய்கள் கடித்தன. இதில், பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் வெற்றிவேல், 3. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, திடீரென வந்த நாய் வெற்றிவேலை கடித்து குதறியது. இதில், முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. குழந்தையை மீட்ட பெற்றோர், உடனடியாக வேலுார் அடுத்த ரத்னகிரி சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்த்தனர்.அதேபோல், ஆர்.கே.பேட்டை பஜார் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சந்திரமவுலி, 14, என்ற சிறுவன், நேற்று முன்தினம் இரவு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அந்த பகுதியில் புதிதாக சுற்றித் திரிந்த நாய், சந்திரமவுலியை கடித்து குதறியது.அக்கம்பக்கத்தினர் சந்திரமவுலியை மீட்டு, விளக்கணாம்பூடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல்சிகிச்சைக்காக, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கைவிடப்படும் வளர்ப்பு பிராணிகள்?

உயர் கலப்பின நாய்களை, செல்லப் பிராணிகளாக வீட்டில் வளர்ப்போர், அவற்றை தொடர்ந்து பராமரிக்க இயலாத நிலையில், வீட்டை விட்டு வெளியில் துரத்திவிடுவதாக பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். தெருநாய்கள் என சொல்லப்படும் நாட்டு ரக நாய்கள், உணவு கிடைக்காவிட்டாலும், மனிதர்களை தாக்கும் அளவிற்கு ஆக்ரோஷம் அடைவது இல்லை. கலப்பின நாய்கள் தான், அவற்றின் வளர்ப்போரை தவிர மற்றவர்ளை ஆக்ரோஷமாக தாக்கும். மனிதர்களை தாக்கும் நாய்கள், இதுபோன்ற கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள் தான் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

'ரேபிஸ்' தடுப்பூசி அவசியம்

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் என, கிராம பகுதியில் உள்ள மருத்துவமனைகளிலும், வெறிநாய் கடிக்கான தடுப்பூசி மருந்து இருப்பதை சுகாதார துறை உறுதி செய்ய வேண்டும். வளர்ப்பு நாய்களை வளர்ப்போர், அதுகுறித்த தகவலை, உள்ளாட்சி அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். மேலும், அவற்றின் வாழ்நாள் சான்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் வாயிலாக, வளர்ப்பு நாய்கள், கேட்பாறின்றி கைவிடப்படுவது தவிர்க்கப்படும் என, விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எச்சரித்த 'தினமலர்'

திருவள்ளூர் மாவட்டத்தில் தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படாததால், நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர் எணணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து, நம் நாளிதழில் கடந்த 11ம் தேதி விரிவான செய்தி வெளியானது. அதிகாரிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்திருந்தால், சிறுவர்கள் நாய்க்கடியில் இருந்து தப்பித்து இருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை