உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோர கடைகளுக்கு தினசரி வாடகை ...திட்டம்!:வருவாய் அதிகரிக்க திருத்தணி நகராட்சி முடிவு

சாலையோர கடைகளுக்கு தினசரி வாடகை ...திட்டம்!:வருவாய் அதிகரிக்க திருத்தணி நகராட்சி முடிவு

திருத்தணி:திருத்தணி நகராட்சி வருவாயை அதிகரிப்பதற்கு சாலையோர கடைகளுக்கு, 20 முதல் 100 ரூபாய் வரை தினசரி வாடகை வசூலித்து வருகின்றனர். இதனால், ஒரு மாதத்திற்கு 4 லட்சம் ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைக்கிறது. தினசரி வாடகை செலுத்தும் தங்களுக்கு, நகராட்சி சார்பில் கடைகள் கட்டி தரவேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில் 13,511 வீடுகள், 26 அரசு கட்டடங்கள் மூலம், ஆண்டுக்கு 3.73 கோடி ரூபாய் சொத்து வரியும், 2,575 காலிமனை மூலம் ஆண்டுக்கு 30.55 லட்சம் ரூபாய் சொத்து வரியும், 1,083 வணிக வளாகங்கள் மூலம், 32.03 லட்சம் ரூபாய் தொழில் வரியும் கிடைக்கிறது.மேலும், 1,592 கட்டங்களுக்கு குடிநீர் இணைப்பு மூலம், 9.60 லட்சம் ரூபாய் குடிநீர் கட்டணம் என மொத்தம், ஆண்டுக்கு 4 கோடியே, 10 லட்சம் ரூபாய் நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. இத்தொகையின் மூலம் நகராட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த தொகையால், நகர மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் நகராட்சி நிர்வாகம் சிரமப்பட்டு வருகிறது. இதையடுத்து நகராட்சி கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு புதிய முயற்சிகள் எடுத்து வருகிறது. முதற்கட்டமாக நகராட்சியில் உள்ள, 21 வார்டுகளிலும் சாலையோரம் பழம், பொம்மை, இளநீர், துணி வியாபாரம், காய்கறி மற்றும் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்யபவர்களிடம் தினசரி வாடகை வசூலிக்க தீர்மானித்து, இதற்கான அறிவிப்பும் அறிவிக்கப்பட்டது.அதாவது, குறைந்தபட்சம், 20 ரூபாய் முதல், அதிகபட்சமாக, 100 ரூபாய் வரை வசூலிக்க முடிவு செய்து, 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளன.தற்போது நகராட்சி ஊழியர்கள் பேருந்து நிலையம், மார்க்கெட், பஜார் உள்ளிட்ட, 21 வார்டுகளிலும், சாலையோரம் வாகனங்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் தினசரி வாடகை வசூலித்து வருகிறது.தினமும் 7,000 ரூபாய் முதல், 9,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் நகராட்சிக்கு கூடுதலாக, மாதத்திற்கு 4 லட்சம் ரூபாய் வரை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.சாலையோரம் கூடையில் வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு 20 ரூபாயும், இரு சக்கர வாகனத்தில் வியாபாரம் செய்பவர்களுக்கு 30 ரூபாயும், தார்பாய் விரித்து அல்லது தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு 50 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களில் வியாபாரம் செய்பவர்களுக்கு 100 ரூபாயும் வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நகராட்சி ஆணையர் அருள் கூறியதாவது: நகராட்சியில், 300க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் உள்ளன. இக்கடை வியாபாரிகளால் வீசி செல்லும் கழிவுகள் மற்றும் குப்பையை அகற்றுவதற்கு கூடுதலாக ஆட்கள் நியமித்து செலவிட வேண்டியுள்ளது.இதனால், சாலையோர கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அகற்றுவதற்கு தேவைப்படும் தொகையை, அந்த வியாபாரிகளிடம் இருந்து, குறைந்த பட்சம், 20 முதல் 100 ரூபாய் வீதம் கடைகளுக்கு ஏற்றவாறு தினசரி வாடகை வசூலிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அனுமதியுடன் வசூலித்து வருகிறோம்.அடுத்து வரும் மாதங்களில் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை சாலையோர கடைகளுக்கு பொது ஏலம் விடப்படும். அதில் வரும் வருவாய் நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கும், துப்புரவு பணிகளுக்கும் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கடை கட்டி தர கோரிக்கை

திருத்தணி பேருந்து நிலையம் மற்றும் காய்கறி மார்க்கெட் பகுதியில் சாலையோரம் பழங்கள், காய்கறிகள் வைத்து, 100க்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்கின்றனர். இவர்கள், தினசரி வாடகையாக 600 முதல், 3,000 ரூபாய் வரை நகராட்சிக்கு வாடகை செலுத்துகிறோம். வெயில் மற்றும் மழையில் நனைந்து வியாபாரம் செய்யும் எங்களுக்கு நகராட்சி சார்பில் கடைகள் கட்டிக் கொடுக்க வேண்டுமென, நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

வசூலை நிறுத்த வேண்டும்

சாலையோரம் வியாபாரம் செய்பவர்கள் மிகவும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள். அன்றாடம் வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும், 20 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதுவரை கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் சாலையோர கடை வியாபாரிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அரக்கோணம் முன்னாள் எம்.பி., அரி, அ.தி.மு.க., நகர செயலர் சவுந்தர்ராஜன் ஆகியோர் நகராட்சி ஆணையர் அருளிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

lana
மே 05, 2024 06:56

சூப்பர் எஜமான் நீங்க இவர்களை உம் விட்டு வைக்கவில்லை யா. என்ன ஏற்கனவே இது மாமூல் ஆக வசூலிக்கின்றனர். இப்போ எவன் நகராட்சி யார் ஆளும் கட்சி என்று தெரியாத அளவுக்கு வசூல் வேட்டை நடக்கும். இது தான் திராவிட மாடல்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி