| ADDED : ஜன 13, 2024 09:28 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள, 15 வார்டுகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளுக்கு பணம் செலுத்தி குடிநீர் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் நலனுக்காக சாலையில் சில இடங்களில் பொது குடிநீர் இணைப்பு வைக்கப்பட்டு உள்ளது. ஆரணி ஆற்றில் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் குழாய் வாயிலாக, பேருந்து நிலைய வளாகம், செட்டித்தெரு உள்ளிட்ட இடங்களில் ஐந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்படுகிறது.பின் இங்கிருந்து ஒவ்வொரு வார்டிற்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு குழாய் வாயிலாக வினியோகம் செய்யப்படுகிறது. இதில் நாகலாபுரம் சாலையில், சோதனைச் சாவடி அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டுகுடிநீர் வீணாகி, சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதைப் பார்த்து அவ்வழியே செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, உடைப்பு ஏற்பட்ட குழாயை சீர்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.