| ADDED : நவ 22, 2025 02:12 AM
சோழவரம்: உபரிநீர் கால்வாய் கரைகள் சேதமடைந்ததால், சோழவரம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்கி, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரியின் கலங்கல் பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீர், அங்குள்ள உபரிநீர் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றிற்கு செல்லும். இந்த கால்வாயின் கரைகள் சேதமடைந்து இருப்பதால், ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றிற்கு சீராக செல்லாமல், தேவனேரி சாலையில் தேங்குகிறது. இதனால், வாகனங்கள் சிரமத்துடன் சென்று வருகின்றன. இதுகுறித்து தேவனேரி கிராம மக்கள் கூறியதாவது: ஐந்து ஆண்டுகளுக்கு முன், சோழவரம் ஏரியில் குவாரி செயல்பட்டது. அப்போது, லாரிகள் சென்று வருவதற்காக, கலங்கல் பகுதி அருகே இருந்த கால்வாய் கரைகள், 100 மீ., நீளத்திற்கு வெட்டி எடுக்கப்பட்டது. அந்த கரைப்பகுதி தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், சோழவரம் ஏரியில் இருந்து அவ்வப்போது உபரிநீர் வெளியேற்றும்போது, வெட்டி எடுக்கப்பட்ட பகுதி வழியாக தண்ணீர் தேவனேரி சாலையில் தேங்குகிறது. அதிகளவில் தண்ணீர் வெளியேற்றும்போது, கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து விடுகிறது. தற்போதும் அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிரமங்கள் தொடர்வதால், நீர்வளத் துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.