பள்ளிப்பட்டு:சென்னை நகரின் குடிநீர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பாசன நீராதாரமாக விளங்கும், கொசஸ்தலை ஆற்றின் நதி மூலமான கிருஷ்ணாபுரம் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், சென்னை நகரின் குடிநீர் தேவை பூர்த்தியாக சூழல் ஏற்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கார்வேட் நகரம் மண்டலத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணாபுரம் அணை. கடந்த 1975 ஏப்., 19ல், அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் அடிக்கல் நாட்டினார். 1981ல், 1.26 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. 3 லட்சத்து, 58 ஆயிரம் கனஅடி கொள்ளளவு கொண்டது.இதன் வாயிலாக, 6,125 ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெறுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், 10 கி.மீ துாரம் ஆந்திர மாநிலத்தில் லவா ஆறாக பாய்ந்து, பள்ளிப்பட்டு அருகே தமிழக எல்லைக்குள் நுழைகிறது. பள்ளிப்பட்டில் இருந்து குசா ஆறுடன் இணைந்து கொசஸ்தலையாக பூண்டி நீர்த்தேக்கம் நோக்கி பயணிக்கிறது. இரண்டு தடுப்பணை
இதில், பள்ளிப்பட்டு மற்றும் சொரக்காய்பேட்டை பகுதியில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. சொரக்காய்பேட்டை பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.பள்ளிப்பட்டு, பெருமாநல்லுார், சொரக்காய்பேட்டை, நெடியம், புண்ணியம், சாமந்தவாடா உள்ளிட்ட கிராமங்களின் வழியாக பாய்ந்து சென்று மீண்டும் நகரி அடுத்த சத்திரவாடா பகுதியில் ஆந்திராவிற்குள் நுழைகிறது.நகரி அடுத்த புக்கை அக்ரகாரம் தாண்டி, நல்லாட்டூர் அருகே மீண்டும் தமிழகத்திற்குள் கொசஸ்தலை ஆறு நுழைகிறது. அங்கிருந்து பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது. பூண்டியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் புழல் ஏரிக்கு வருகிறது. முயற்சி நிறுத்தம்
திருவள்ளூர் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் பாசன நீராதாரமாகவும், சென்னையின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் கொசஸ்தலை ஆற்றின் நதிமூலம், ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணை தான். ஆந்திரா மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் தண்ணீரை தடுத்து, ஆந்திர மாநில பகுதியிலேயே மேலும் இரண்டு தடுப்பணைகளை கட்டவும் ஆந்திர மாநில அரசு முயற்சித்தது. கிருஷ்ணாபுரம் அடுத்த கங்கமாம்பாபுரம் பகுதி மற்றும் நகரி அடுத்த புக்க அக்ரகாரம் அருகே என, இரண்டு இடங்களில் இதற்காக, ஆந்திர மாநில அரசால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இடம் தேர்வு செய்யப்பட்டது.இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.கிருஷ்ணாபுரம் அணையின் நீர்மட்டம் தற்போது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அணையின் மதகு அடிப்பகுதியை கூட நீர்மட்டம் தொடவில்லை. பேபி காய்வாய் வழியாக மட்டுமே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது, கிருஷ்ணாபுரம் சுற்றுப்பகுதி விவசாய நிலங்களின் பாசனத்திற்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. அணையில் நீர்மட்டம் குறைந்து மணல் திட்டுகள் தென்பட துவங்கியுள்ள நிலையில், உள்ளூர் மீனவர்கள், அணைக்குள் நடந்து சென்று துாண்டில் போட்டு மீன் பிடித்து செல்கின்றனர்.கடந்த ஒரு வாரமாக, திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதியில் கோடை மழை பெய்து வந்தாலும், கிருஷ்ணாபுரம் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு இல்லை. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 1 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது.
கூட்டு குடிநீர்
சமீபத்தில், பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, பள்ளிப்பட்டு ஒன்றியம், ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணி ஒன்றியங்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக ராட்சத குழாய் பதிக்கும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தால், ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணி ஒன்றியங்கள் பெருமளவில் பயன்பெறும்.ஆந்திர மாநிலத்தில் குறைந்து வரும் மழையால் நீர்வரத்து குறைந்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், சென்னைக்கு குடிநீர் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.