| ADDED : டிச 27, 2025 06:25 AM
பொன்னேரி: ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள ஆண்டார்மடம் தடுப்பணை நிரம்பி வழியும் நிலையில், அங்குள்ள ஷட்டர்களை மூடி, கூடுதல் தண்ணீரை சேமிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னேரி அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே, கடந்த 2022ல், 13 கோடி ரூபாயில் புதிய தடுப்பணை அமைக்கப்பட்டது. தடுப்பணையில் இருந்து, மேற்கு நோக்கிய பகுதியில், 3 கி.மீ., தொலைவிற்கு மழைநீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தடுப்பணையில், 11 ஷட்டர்கள் அமைக்கப்பட்டன. ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது ஷட்டர்களை திறந்து வைத்தும், குறையும்போது அவற்றை மூடி மழைநீரை சேமித்து வைக்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையின்போது, ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை நிரம்பியது. உபரிநீர் பழவேற்காடு கடலுக்கு சென்றது. தற்போது, ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், ஷட்டர்கள் மூடப்படாமல் இருப்பதால், தேங்கியுள்ள தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள், தடுப்பணை ஷட்டர்களை மூடி, வெளியேறும் தண்ணீரை தடுத்து, கூடுதலாக தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.