உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொசஸ்தலை ஆற்றில் வெள்ள தடுப்புச்சுவர்...உடைந்தது:தரமின்றி அமைத்ததால் ஒரே ஆண்டில் சேதம்;ரூ.9.10 கோடி ரூபாய் நிதி வீணாகிய அவலம்

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள தடுப்புச்சுவர்...உடைந்தது:தரமின்றி அமைத்ததால் ஒரே ஆண்டில் சேதம்;ரூ.9.10 கோடி ரூபாய் நிதி வீணாகிய அவலம்

பொன்னேரி:பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில், கரைகள் உடைப்பு ஏற்படுவதை தடுக்க, 9.10 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கான்கிரீட் தடுப்புச்சுவர் உடைந்தும், சரிவு பகுதிகளில் பதிக்கப்பட்ட கற்கள் சரிந்தும், கரைகள் ஆற்றில் கரைந்தும் கிடக்கிறது. தரமின்றி கட்டப்பட்டதால், ஒரே ஆண்டில் கரைகள் முற்றிலும் சேதமடைந்தது, கிராமவாசிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் துவங்கி, வேலுார் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக பூண்டி நீர்த்தேக்கத்தை அடையும் கொசஸ்தலை ஆறு, திருவள்ளூர், தாமரைப்பாக்கம், வன்னிப்பாக்கம், நாப்பாளையம் வழியாக, 136 கி.மீ., துாரம் பயணித்து, எண்ணுாரில் வங்காள விரிகுடா கடலில் முடிகிறது.மழைகக்காலங்களில், பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பும்போது, உபரிநீர் வெளியேற்றப்படும். அவ்வாறு வெளியேற்றப்படும் போது, ஆற்றின் கரையோரங்கள் பாதிப்பு ஏற்படுவதும், உடைப்புகள் ஏற்பட்டு அருகில் உள்ள கிராமங்கள் பாதிப்பிற்கு உள்ளாவதும் தொடர்கிறது.கடந்த காலங்களில், பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம், நாலுார் கம்மார்பாளையம், மடியூர், நாப்பாளையம், கொண்டக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றின் கரைகள் உடைந்து, குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் வெள்ளநீர் முழ்கடித்து பெரும் பாதிப்புகளை உண்டாக்கியது.வெள்ளப்பெருக்கு காலங்களில் ஏற்படும் உடைப்புகளை தவிர்க்க, கடந்தாண்டு பலவீனமாக உள்ள ஆற்றின் கரைகள் கண்டறியப்பட்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம், மடியூர் கிராமங்களுக்கு இடையே ஆற்றின் இருபுறமும், 9 கி.மீ., நீளத்திற்கு, 9.10 கோடி ரூபாயில் கரைகளை பலப்படுத்தும் பணிகள் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்டன.கரையோரங்களில், 2 மீ., உயரத்திற்கு கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டன. கரைகளில் இருந்து கான்கிரீட் சுவர் வரை சரிவு பகுதிகளில், மண் சரிவு ஏற்படுவதை தடுக்க சிமென்ட் கற்கள் பதிக்கப்பட்டன.கடந்தாண்டு இறுதியில் கனமழை மற்றும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகபட்சமாக ஆற்றில், 45,000 கனஅடி தண்ணீர் வெளியேறியது.புதிதாக சீரமைக்கப்பட்ட கரைகள், ஆற்று வெள்ளத்தில் கரைந்து போனது. தடுப்புச்சுவர்கள் முற்றிலும் உடைந்தும், சிதைந்தும் போயின. சரிவுகளில் பதிக்கப்பட்ட சிமென்ட் கற்கள், கரையுடன் சரிந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.வன்னிப்பாக்கம் கிராமத்தில், 100 மீட்டர் தொலைவிற்கு முற்றிலும் சேதமடைந்து, கரை இல்லாமல் காட்சியளிக்கிறது. தரமற்ற முறையில் கரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், ஓராண்டிற்குள் அவை சேதமடைந்து கிடப்பது, கிராமவாசிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:கரை சீரமைப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. கட்டுமானம் செய்து, ஆறு மாதத்திற்குள் சேதமடைந்துள்ளது என்றால், இதன் தரம் எந்தளவிற்கு இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.அரசின் நிதி முற்றிலும் வீணடிக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழை காலத்திற்குள் கரை சீரமைப்பு பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த பகுதியில் கரை சீரமைப்பு பணிகள் மேற்கொண்டிருந்தபோது, ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது. கரை சீரமைப்பு பணிகள் முழுமை பெறவில்லை. தற்போது, சரிவு பகுதிகளில் பதிக்கப்பட்ட கற்கள் சரிந்துள்ளன. ஆற்றில் நீர் இருப்பு குறைந்தவுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.நீர்வளத்துறை அதிகாரி,திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

अप्पावी
மார் 15, 2025 16:56

புரியாம பேசாதீங்க. அந்த ரூ 9.10 கோடியும் வீணாகலை. திருட்டு திராவிட அதிகாரிகள், அமைச்சர்கள், கழக பொறுப்பாளர்கள், காண்டிராக்டர்களுக்கு பயன் தரும் விதமாய் பத்திரமாய் போய்ச் சேர்ந்து விட்டது. வீண் கவலை வேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை