ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்ட அடிக்கல்
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் 2.80 கோடி ரூபாயில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நடும் விழா நடந்தது.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கடந்த, 1981ம் ஆண்டு அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை துவக்கப்பட்டது.மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. கடந்த, 2009ம் ஆண்டு 73.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புறநோயாளிகளுக்காக புதிய கட்டடம் கட்டப்பட்டது. தற்போது இங்கு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற, 50 படுக்கைகள் உள்ளன.இங்கு தினமும், 500 - 600 நோயாளிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர். இங்கு ஆப்ரேஷன் தியேட்டர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. மேலும், அதிகளவு நோயாளிகள் வரும்போது, படுக்கை பற்றாக்குறையாக உள்ளது.இந்த மருத்துவமனைக்கு தேசிய சுகாதார பணிகள் சார்பில், 2.80 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று காலை பூமி பூஜை நடந்தது. இதில் மருத்துவமனை தலைமை மருத்துவர் சுரேஷ் மற்றும் செவிலியர்கள், பேரூராட்சி மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.