| ADDED : டிச 06, 2025 06:33 AM
திருவாலங்காடு: புலவநல்லுார் ஏரியில் கோரைப்புல் ஆக்கிரமித்துள்ளதாலும், ஏரியை துார்வாராததாலும், கோடைக்கு முன்னர் ஏரி நீர் வற்றி விடுகிறது. இதனால் பாசனத்திற்கு நீர் போதவில்லை என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திருவாலங்காடு ஒன்றியம், பழையனுார் கிராமத்திற்கு உட்பட்டது புலவநல்லுார் ஏரி. 25 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரி, திருவாலங்காடு ---- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் கால்நடை மருத்துவமனை அருகே உள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் மழை காலங்களில் ஏரி முழுமையாக நிரம்பும்போது, 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த ஏரி பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளதால், நீர்ப்பிடிப்பு பகுதி மண்ணால் துார்ந்து உள்ளது. மேலும், ஏரியை ஆக்கிரமித்து கோரைப்புல் முளைத்துள்ளதால், மழை காலங்களில் போதுமான அளவு நீர் சேகரமாக முடியாத நிலை உள்ளது. ஏரியில் சேகரமாகும் நீரைக்கொண்டு ஒரு போகத்திற்கு மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஏரி துார்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. எங்கள் கிராமத்தில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஏரி நீரை நம்பி, 200 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. தற்போது ஏரியில் கோரைப்புல் ஆக்கிரமிப்பு மற்றும் துார்வாராமல் நீர் இருப்பு இன்றி போவதால் மூன்றாம் போகம் நடவு செய்வதை தவிர்த்து வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஏரியை துார்வாரி சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.