சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலி திருவள்ளூரில் பணிகள் பாதிப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி, கடந்தாண்டு தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நகராட்சியில், 27 வார்டுகளில், 82,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வீடு, கடைகளில் இருந்து மட்கும், மட்காத குப்பை, 45,000 கிலோ வெளியேற்றப்படுகிறது.இந்த குப்பையை தனியார் ஊழியர்கள், 114 பேர், வீடுகள்தோறும் சென்று சேகரித்து வருகின்றனர். தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால், இங்கு ஒரு சுகாதார அலுவலர், நான்கு சுகாதார ஆய்வாளர் பணி நிரப்ப வேண்டும்.ஆனால், தற்போது ஒரு சுகாதார அலுவலர் மட்டுமே பணியில் உள்ளனர். நான்கு ஆய்வாளர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால், சுகாதார அலுவலர் ஒருவர் மட்டுமே, நான்கு ஆய்வாளர்களின் பணியை கூடுதலாக கவனித்து, நகராட்சியில் குப்பை அகற்றும் பணியை கண்காணித்து வருகிறார்.மேலும், அலுவலக பணி, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் போன்ற பணிச்சுமை காரணமாக, பிற பகுதிகளுக்கு கண்காணிப்பிற்காக செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே, நகராட்சி நிர்வாக துறையில், காலியாக உள்ள நான்கு சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என, நகரவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.