கழிவுநீரை சுத்திகரிக்க வடிகட்டி விழிப்புணர்வு இல்லாததால் நாசம்
ஆர்.கே.பேட்டை,:ஊராட்சிகளில், கழிவுநீர் மேலாண்மை பிரச்னைக்கு தீர்வாக, தற்போது கழிவுநீரை சுத்திகரிக்கும் விதமாக வடிகட்டிகளின் வழியாக செலுத்தி, நீர்நிலையில் கலக்கும் புதிய கட்டமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், நீர்மாசு பெருமளவில் குறைக்கப்படும்.கிராமத்தின் கழிவுநீர் கால்வாய் முடியும் இடத்தில், வடிகட்டி தொட்டி கட்டப்படுகிறது. 200 சதுர அடி பரப்பில் தரையில் கிடைமட்டமாக கட்டப்படும் இந்த தொட்டியின் ஒரு முனையில் கழிவுநீர் உட்செலுத்தப்படுகிறது.இந்த வடிகட்டியில், ஒன்றரை அங்குல ஜல்லிக்கற்கள் நிரப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில், இரும்பு வலை தடுப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரும்பு தடுப்புகள் மற்றும் ஜல்லிக்கற்கள் வழியாக கடந்து வரும் கழிவுநீர், மறுமுனையில், மாசுகள் நீக்கப்பட்ட நீராக வெளியேறுகிறது. மாசு நீக்கப்பட்டு வெளியேறும் நீர், அதையொட்டிய நீர்நிலைகளில் கலக்கப்படுகிறது.இந்த முன்மாதிரி திட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார், விடியங்காடு ஊராட்சிகளிலும், பள்ளிப்பட்டு ஒன்றியம், கொத்தகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் வங்கனுாரில் உள்ள கிடைமட்ட வடிகட்டியை ஒட்டி, பகுதிவாசிகள் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனால், கட்டமைப்பு சிதைந்து கழிவுநீர், வடிகட்டி வழியாக பாய்ந்து செல்லாமல் நேரடியாக நீர்வரத்து கால்வாயில் பாயும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னோடியான இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை பகுதி வாசிகளிடையே ஏற்படுத்த, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.