தொழிலாளியிடம் பணம் மொபைல்போன் பறிப்பு
திருத்தணி;நெசவு தொழிலாளியை மர்ம நபர்கள் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி மொபைல்போன் மற்றும் பணத்தை பறித்து விட்டு தப்பினர். திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 42; நெசவு தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை 'ஆக்டிவா' ஸ்கூட்டரில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இரவு 8:00 மணிக்கு திருவள்ளூரில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திருத்தணி -- பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில், தெக்களூர் ஏரிக்கரை அருகே சென்ற போது, இரண்டு வாலிபர்கள் திடீரென வாகனத்தை மறித்தனர். வாகனத்தை நிறுத்திய சீனிவாசனிடம், கத்தியை காட்டி மிரட்டி, 3,000 ரூபாய் மற்றும் மொபைல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.