உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  குளமான இணைப்பு சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

 குளமான இணைப்பு சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருமழிசை: சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை குளமாக மாறியதால், வாகனங்கள் கழுவும் இடமாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் விரிவாக்க பணிகள் துவங்கியது. இதில், திருமழிசை, செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், செட்டிபேடு, தண்டலம் உட்பட பல பகுதிகளில் இணைப்பு சாலை பணி மந்தகதியில் நடந்து வருகிறது. திருமழிசை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள இணைப்பு சாலையில், மழைநீர் கால்வாய் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. இதனால், சமீபத்தில் பெய்த மழையால், இணைப்பு சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதில், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி கழுவி வருகின்றனர். இதனால், சாலை குறுகி, மற்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி