| ADDED : டிச 01, 2025 03:37 AM
திருவாலங்காடு: மது பழக்கத்திற்கு அடிமையாகும் பெற்றோரால், அவர்களது குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படுவதாக, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில், 1,350க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் குடும்ப பின்னணியில் இருந்து வரும் ஏராளமான மாணவர்கள், அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஆனால், குடும்ப மற்றும் சமூக சூழல் காரணமாக, இவர்களில் சிலர் படிப்பை தொடர்வது கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக, குடிப்பழக்கத்தால் தந்தையை இழந்த மாணவர்கள், படிப்பை பாதியில் நிறுத்துவது அதிகரித்து வருகிறது. திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களில் 107 பேருக்கு, தாய் அல்லது தந்தை இல்லாத நிலை உள்ளது. மேலும், 44 பேருக்கு இருவருமே இல்லாத நிலை உள்ளது. திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: ஒரு மாதத்தில் மட்டும், எங்கள் பள்ளியில் நான்கு மாணவர்களின் தந்தைகள் குடிப்பழக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்த மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், மாற்று சான்றிதழ் பெற்று சென்றுவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர். குடிப்பழக்கத்தின் தாக்கம், குழந்தைகளின் நடத்தையிலும் வெளிப்படுவதாக குறிப்பிடும் ஆசிரியர்கள், 'குடிப்பழக்கம் கொண்ட தந்தை மற்றும் முறையான குடும்ப கட்டமைப்பு இல்லாத சூழலில் வளரும் குழந்தைகள், தவறான வார்த்தைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. சிலர் 'கூலிப்' போதைக்கு அடிமையாகின்றனர். பெற்றோர்களும் அவர்களை கண்டிப்பதில்லை' என்றனர்.