திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் தேர் மண்டப சுவரில் வளர்ந்துள்ள செடிகள்
திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரம் மற்றும் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெறும்.அப்போது தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்வர்.மிகவும் பழமையும், சோழர்களின் வரலாற்று சின்னமாகவும் உள்ள இந்த கோவிவில் பங்குனி உத்திரத்தின் ஏழாம் நாளில் உற்சவர் வடாரண்யேஸ்வரர் தேரில் வீதியுலா வருவார்.இவர், வீதியுலா வரும் இந்த தேர் கமலத்தேர் என அழைக்கப்படுகிறது.இந்த தேர், பாதுகாப்பாக இருக்க திருவாலங்காடு காவல் நிலையம் அருகே, 65 அடி உயரத்தில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக மண்டபத்தின் கூரையில் செடிகள் வளர்ந்துள்ளதால் கட்டடம் வலுவிழந்து வருகிறது.இந்நிலையில், தேர் மண்டபத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.