உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  அறிவுறுத்தலை மீறி நிறுத்தப்படும் தனியார் பேருந்துகள் கண்டுகொள்ளாத பொன்னேரி நகராட்சி நிர்வாகம்

 அறிவுறுத்தலை மீறி நிறுத்தப்படும் தனியார் பேருந்துகள் கண்டுகொள்ளாத பொன்னேரி நகராட்சி நிர்வாகம்

பொன்னேரி: பேருந்து நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளதால், மாற்று இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியும், தனியார் பேருந்துகள் அதை பின்பற்றாமல் இருப்பது மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை மாதவரம், திருவள்ளூர், திருத்தணி, பழவேற்காடு, திருப்பதி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, தினமும், அரசு மற்றும் தனியார் என, 90 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்குள்ள கட்டடம் சேதமடைந்து பலவீனமாகியதை தொடர்ந்து, 1.45 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. கட்டுமான பணிகள் முடியும் வரை, பழைய பேருந்து நிலையம், தேரடி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தற்போது மூன்று இடங்களில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே சமயம், நகராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல், கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திலேயே தனியார் பேருந்துகள் தொடர்ந்து நின்று பயணியரை ஏற்றிச் செல்கின்றன. இது மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து மக்கள் கூறியதாவது: புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது எனக்கூறி, அரசு பேருந்துகள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், தனியார் பேருந்துகள் எப்போதும் போல பழைய நிலையையே தொடர்கின்றன. இங்கு எப்போதும், 2 - 3 தனியார் பேருந்துகள் நிற்கின்றன. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ