குண்டும் குழியுமான சித்துார்நத்தம் சாலை தொழிலாளர்கள், நோயாளிகள் அவதி
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, ஈகுவார்பாளையம் கிராமத்தில் இருந்து, சித்துார்நத்தம் வரையிலான இரண்டு கிலோ மீட்டர் சாலை, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள சாலையாகும்.அந்த சாலை வழியாக, சித்துார்நத்தம், காரம்பேடு, பெரியபாளையத்துகண்டிகை, குருவராஜகண்டிகை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தினசரி சென்று வருகின்றனர்.குறிப்பாக வாரம்தோறும், 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் அந்த சாலை வழியாக ஈகுவார்பாளையம் கிராமத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும், அந்த சாலையில், 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த அந்த சாலையை பயன்படுத்த முடியாத அளவிற்கு படு மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், கிராம மக்கள், கர்ப்பிணிகள், தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக, அந்த சாலை வழியாக தொழிற்சாலைகளுக்கு வரும் கனரக வாகனங்களின் அச்சு முறிந்து பழுதாகி நிற்பது வாடிக்கையாகி போனது என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உற்பத்தி பாதிப்பதாக தொழில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றனர்.கிராம மக்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகங்களின் நலன் கருதி உடனடியாக அந்த சாலையை அகலப்படுத்தி, தரத்துடன் அமைக்க கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.