பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்க கோரிக்கை
திருவாலங்காடு: பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாலங்காடு ஒன்றியம் கூர்மவிலாசபுரம் ஊராட்சியில், கனகம்மாசத்திரம் --- தக்கோலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அரசு துவக்கப்பள்ளி. இந்த வளாகத்தில் ஊராட்சி அலுவலகம், நுாலகம் என ஒருங்கிணைந்த வளாகமாக உள்ளது. இந்த வளாகத்துக்கு, 20 ஆண்டுகளுக்கு முன் சுற்றுசுவர் அமைக்கப்பட்டது. சமூக விரோதிகள் உடைத்ததால், தற்போது சுற்றுசுவர் பல இடங்களில் சேதமடைந்து உடைந்து விழும் என்ற நிலையில் உள்ளது. சேதமடைந்த சுற்றுச்சுவர் வழியாக சமூக விரோதிகள் உள்ளே புகுந்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்துவதும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து உள்ளது. எனவே பள்ளி வளாக சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.