பொன்னேரி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும், தலா 1 லட்சம் ரூபாய் வரை செலவில் அரைகுறை கட்டுமான பணிகளுடன் கண்துடைப்பிற்காக, உபகரணங்கள் இல்லாத, விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வரிப்பணம் 5.26 கோடி ரூபாய் விரயமாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்த்தில், 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன. கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக, அரசு நிலங்களில் விளையாட்டு திடல்கள் அமைக்கும் திட்டம் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம், கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் இடையே விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்துதல், இளைஞர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், கூட்டு மனப்பான்மையை உருவாக்குதல், விளையாட்டுத் தரத்தை உயர்த்துதல் ஆகும். இதற்காக ஒவ்வொரு ஊராட்சியிலும், காலியாக உள்ள அரசு நிலங்களில், இந்த திடல்கள் அமைக்கப்பட்டன. அங்கு வாலிபால், கூடைப்பந்து, கிரிக்கெட், கோகோ உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடுவதற்காக கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 526 ஊராட்சிகளுக்கும், தலா 1 லட்சம் என, மொத்தம் 5.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு கூலியாக, 53,000 ரூபாய், கட்டுமான பணிகளுக்கு, 47,000 ரூபாய் என செலவிடப்பட்டது. இவை முறையாக அமைக்காமல் கண்துடைப்பிற்காக, ஊருக்கு ஒதுக்குப்புறமான காலி இடங்களில், தரமற்ற முறையில் ஏற்படுத்தப்பட்டன. மேலும் எந்தவொரு விளையாட்டிற்கும் தேவையான கம்பங்கள், வலைகள் உள்ளிட்டவை பொருத்தப்படாமலும், விளையாட்டு உபகரணங்கள் வழங்காமலும் திட்டம் முடங்கி கிடக்கிறது. சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் பலகோடி ரூபாய் செலவிட்டு விளையாட்டு திடல்கள் அமைக்கும் அரசு, கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த சரியான திட்டமிடல் இல்லாமல், இதுபோன்ற கண்துடைப்பான திட்டங்களை செயல்படுத்துகிறது. இதனால், மக்களின் வரிப்பணம் விரயமாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுதும் தரமின்றி அமைக்கப்பட்ட விளையாட்டு திடல்களை ஆய்வு செய்யவும், தேவையான விளையாட்டு சாதனங்களை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விளையாட்டு திடல்களில் உடற்பயிற்சி செய்வதற்கான இரும்பு சாதனங்கள் பொருத்துவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது. மற்ற விளையாட்டு சாதனங்களுடன் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். ஒவ்வொரு ஊராட்சியிலும் பெயருக்கு விளையாட்டு திடல் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு 1 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. அதுவும் தரமின்றி உள்ளது. விளையாட்டு திடல் அமைத்தால், அதற்கான உபகரணங்கள் இருந்தால்தானே இளைஞர்கள், சிறுவர்கள் பயன்படுத்த முடியும். காலி இடத்தில் தரையோடு இருக்கும் கட்டுமானங்கள் எதற்கு? சரியான திட்டமிடல் இல்லாமல், இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதால், மக்களின் வரிப்பணம் தான் விரயமாகி இருக்கிறது. திட்டத்தின் நோக்கமே பயனற்றுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' - எம்.பி.சேகர் சமூக ஆர்வலர், பொன்னேரி.