மேலும் செய்திகள்
புதுப்பாளையம் தடுப்பணை துார் வாருவது அவசியம்
09-Jun-2025
பொன்னேரி : மீஞ்சூர் ஒன்றியத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கால்வாய்கள் துார்வாராமல் அமைக்கப்பட்ட 189 தடுப்பணைகள் பயனின்றி உள்ளன. இதற்காக செலவிட்ட, 8 கோடி ரூபாய் நிதியும் வீணடிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 55 ஊராட்சிகளில், 200க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. ஒவ்வொரு ஏரியில் இருந்தும், மற்றொரு ஏரிக்கு மழைநீர் செல்வதற்கான கால்வாய்கள் உள்ளன.இவை, விவசாய நிலங்களின் இடையே பயணிக்கும்போது, கால்வாயில் தேங்கும் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.இதுபோன்ற கால்வாய்களில் மழைநீரை சேமிக்கவும், கிராமங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையிலும், கால்வாய்களின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கும் திட்டம், 2020ம் ஆண்டில் துவக்கப்பட்டது.மீஞ்சூர் ஒன்றியத்தில் நிலத்தடி நீர் உவர்ப்பு பகுதிகளாக உள்ள கிராமங்களை தேர்ந்தெடுத்து, இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த நிதியாண்டில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 2.72 கோடி ரூபாயில், 68 தடுப்பணைகள் அமைக்கப்பட்டன.கடந்த 2021ம் ஆண்டில், 2.64 கோடி ரூபாயில், மழைநீர் கால்வாய்களின் குறுக்கே, 66, கடந்த 2022ல், 2.48 கோடி ரூபாயில், 55 புதிய தடுப்பணைகள் என, மொத்தம், 189 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு தடுப்பணையும், 5 மீட்டர் அகலத்தில், 2 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதே சமயம், தடுப்பணைகள் அமைந்த இடங்களில் கால்வாய்கள் துார்வாரப்படாமல் உள்ளன. இதனால், மழைக்காலங்களில் தடுப்பணைகளில் தண்ணீர் தேங்குவதில்லை.மேலும், சரியான திட்டமிடல் இன்றி அமைத்ததால், எவ்வித பயனும் இன்றி உள்ளன. இதற்காக செலவிட்ட நிதியும் வீணாகி உள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:தடுப்பணை அமையும் பகுதிகளில் மழைநீர் தேங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வதில்லை. கால்வாய்களை துார்வாராமல் தடுப்பணை அமைப்பதால் என்ன பயன். கால்வாயின் அகலத்திற்கு இல்லாமல் தடுப்பணைகள் குறுகலாக உள்ளன.தடுப்பணைக்கு இருபுறமும் கரைகள் பலப்படுத்தப்படாததால், மழைநீர் தேங்குவதில்லை. தடுப்பணை அமைக்க ஒப்பந்தம் எடுப்பவர்களும் அரைகுறையாக பணிகளை முடிக்கின்றனர். நிலத்தடி நீர் பாதுகாப்பு, விவசாயத்திற்கு பயன்படும் என, அரசு திட்டமிட்டாலும், அதை செயல்படுத்துவதில் யாரும் அக்கறை கொள்வதில்லை. கடமைக்கு செய்கின்றனர்.தற்போது அமைக்கப்பட்ட தடுப்பணைகளால் விவசாயத்திற்கும், நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கும் எந்த பயனும் இல்லை. அவை பயன்படும் வகையில், கால்வாய்களை முழுமையாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஒன்றிய நிர்வாகத்தின் கீழுள்ள கால்வாய்கள், 100 நாள் பணியாளர்களை கொண்டு, அவ்வப்போது துார்வாரப்படுகின்றன. நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ளவை துார்வாரப்படாமல் இருப்பது குறித்து, அத்துறையினருக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வடகிழக்கு பருவமழைக்கு முன் அனைத்து கால்வாய்களையும் துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்.ஒன்றிய அதிகாரி,மீஞ்சூர்.
09-Jun-2025