பள்ளிப்பட்டு திருத்தணி,
ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை தீர்ப்பதற்காக,
47 கோடி ரூபாய் மதிப்பில் கொசஸ்தலை ஆற்றில் இருந்து ஆழ்துளை கிணறுகள்
அமைத்து, கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக முதற்கட்டமாக, 9 ஊராட்சிகளில் பணி
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் இருந்து வரும் லவா, குசா ஆறு, கார்வேட்நகரம் அருகே அம்மப்பள்ளி என்ற கிஷ்ணாபுரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரிநீர் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் பகுதியில் இணைந்து கொசஸ்தலை ஆறாக உருவாகுகிறது.இந்த ஆறு, பெருமாநல்லுார், மேலப்பூடி, புண்ணியம், சாமந்தவாடா, புண்ணியம், நல்லாட்டூர், லட்சுமாபுரம், ராமாபுரம், நாராயணபுரம் வழியாக திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி நீர்த்தேக்கம் செல்கிறது. தட்டுப்பாடு
பருவ மழை மற்றும் அம்மப்பள்ளியில் இருந்து திறந்து விடும் தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். கோடை காலத்திலும் கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராமங்களில் நிலத்தடி நீருக்கு பஞ்சம் இருக்காது.கடந்த 2016ம் ஆண்டு ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம், வங்கனுார், ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் சாலை மறியல், அரசு அலுவலகங்கள் முன் காலிகுடங்களுடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதே போல் திருத்தணி ஒன்றியத்திலும் குடிநீர் பிரச்னையால் பல ஊராட்சிகளில் மக்கள் போராட்டங்கள் நடத்தினர்.திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு அரசு கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை, புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என, பகுதியினர் கோரிக்கை வைத்தனர். பணிகள்
இதையடுத்து, கடந்த இரு மாதங்களுக்கு முன் தமிழக அரசு கொசஸ்தலை ஆற்றில் இருந்து திருத்தணி மற்றும் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்க, 47 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விட்டது. இப்பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் மூலம் துவங்கி துரித வேகத்தில் நடந்து வருகிறது.இந்த புதிய கூட்டுக்குடிநீர் திட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஜி.சி.எஸ். கண்டிகை, வங்கனுார், ஆர்.கே.பேட்டை, எஸ்.வி.ஜி.புரம், திருத்தணி ஒன்றியம், செருக்கனுார், எஸ்.அக்ரகாரம், கன்னிகாபுரம், தாடூர், கார்த்திகேயபுரம் என முதற்கட்டமாக 9 ஊராட்சிகளில் குடிநீர்வினியோகம் செய்வதற்கு, குடிநீர் குழாய்கள்,நீர்தேக்கத் தொட்டி மற்றும் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் நிறைவடைந்தால் மேற்கண்ட ஊராட்சிகளில் நிரந்தரமாக குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்.இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளிப்பட்டு பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை மற்றும் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து, மேற்கண்ட 9 ஊராட்சிகளுக்கு, மொத்தம், 85 கி.மீ., துாரம் குழாய்கள் புதைக்கும் பணிகள், 80 சதவீதம் முடிந்துள்ளன. செருக்கனுார்--, தாடூர் ஆகிய ஊராட்சிகளுக்கு ஒரு நீர்த்தேக்க தொட்டியும், மீதமுள்ள, 7 ஊராட்சிகளுக்கு தலா ஒரு நீர்த்தேக்க தொட்டி என, மொத்தம், 8 தொட்டிகள் கட்டும் பணி நடக்கிறது. இது தவிர, 1லட்சம் லிட்டர் அளவுள்ள ஒரு குடிநீர் மேல்நிலைத் தொட்டி, 60,000 லிட்டர் அளவுள்ள 3 தொட்டிகள், 30,000 லிட்டர் அளவுள்ள 6 தொட்டிகள், 20,000 லிட்டர் அளவுள்ள 31 தொட்டிகள், 10,000 லிட்டர் அளவுள்ள 6 தொட்டகள் என மொத்தம், 47 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டும் பணி 40 சதவீதம் முடிந்துள்ளன. இரு மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்துகுடிநீர் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.