| ADDED : நவ 23, 2025 03:26 AM
திருத்தணி: வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு கொடுத்த விண்ணப்பங்களை, வரும் 26ம் தேதிக்குள் திரும்ப பெற வேண்டும் என, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, திருத்தணி ஆர்.டி.ஓ., கனிமொழி அறிவுறுத்தினார். திருத்தணி சட்டசபை தொகுதியில் உள்ள 330 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்றனர். திருத்தணி வருவாய் கோட்டாட்சியரும், அலுவலருமான கனிமொழி, வேலஞ்சேரி அரசு பள்ளி மற்றும் திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை பார்வையிட்டார். அப்போது, வரும் 26ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்பின், ஆர்.டி.ஓ., கனிமொழி கூறியதாவது: ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அனைவரும், அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு வழங்கிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வரும் 26 அல்லது 27ம் தேதிக்குள் திரும்ப பெற வேண்டும். அதன்பின், சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.