காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில், கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனம் செயல்படுகிறது. தினமும், 10 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றும் திறன் கொண்டதாகும்.பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால், தற்போது, தினமும், 3 கோடி லிட்டர் மட்டுமே குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறதது. இந்நிறுவனத்தில், பல்வேறு பிரிவுகளில், 141 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இரண்டு மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கபடவில்லை எனக்கூறி, நேற்று, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தினருடன் இணைந்து, தொழிலாளர்கள், தொழிற்சாலை நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின்போது தொழிலாளர்கள் கூறியதாவது:பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்களாகவே இருக்கிறோம். இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காததால், பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை உள்ளது. ஒப்பந்ததாரர் இல்லாமல், சென்னை குடிநீர் வாரியம் நேரடியாக, தொழிற்சாலையை நடத்த முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.