உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேடும் நிலையில் ஏழு நீர்நிலைகள் ...ஏரியை காணோம்! மீட்க போராடும் சோழவரம் மக்கள்

தேடும் நிலையில் ஏழு நீர்நிலைகள் ...ஏரியை காணோம்! மீட்க போராடும் சோழவரம் மக்கள்

சோழவரம்: சோழவரத்தில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கிய ஏழு நீர்நிலைகள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு ஆக்கிரமிப்பில் சிக்கி, விவசாய நிலங்களாக மாறிவிட்டது. அவற்றை மீட்க ஏழு ஆண்டுகளாக போராடியும், இன்னும் தீர்வு கிடைக்காததால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், பூதுார் கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு மத்தியில், 8.21 ஏக்கர் பரப்பிலான, ஏழு நீர்நிலைகள் இருந்தன. மழைக்காலங்களில் இவற்றில், மழைநீர் தேங்கும்போது, நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு வந்தது. அதிருப்தி காலப்போக்கில், தனிநபர்கள் சிலரால் மேற்கண்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவற்றில் நெல், வாழை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. பூதுார் பெரிய ஏரியின் மதகு பகுதியும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால், ஏரிக்கு நீர் வரத்து தடைபட்டுவிட்டது. தற்போது ஏழு நீர்நிலைகள் இருந்த சுவடே தெரியாமல், விவசாய நிலங்களாக மாறி உள்ளன. ஏரிகளை மீட்க எடுக்க வேண்டும் என, கடந்த, 2018 ல் இருந்து, பொன்னேரி தாசில்தார், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டர் என, கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர். தொடர் மனுக்களால், வருவாய்த்துறையினர் அவ்வப்போது, 'அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கடாது. அத்துமீறி விவசாயம் மற்றும் கட்டுமானங்களில் ஈடுபடக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை பலகை வைத்து, ஒப்பேற்றி வருகின்றனர். எச்சரிக்கை பலகை வைக்கப்பட்ட அடுத்த சில நாட்களில், ஆக்கிரமிப்பாளர்கள் அவற்றை துாக்கி வீசி விடுகின்றனர். அதிகாரிகளின் உத்தரவைமீறி, நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் தொடர்கிறது. கடந்த, 10 ஆண்டுகளாக நீர்நிலைகள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலேயே சிக்கி உள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீரை சேமித்து வைப்பதில், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகங்கள் ஆர்வம் காட்டாமல், அலட்சியமாக இருப்பதுடன், ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோவதாகவும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நிரந்தர தீர்வு பூதுார் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவக்குமார் கூறியதாவது: கடந்த 2018ம் ஆண்டில் இருந்து மனு கொடுத்து வருகிறோம். இரண்டு முறை வருவாய்த்துறை எச்சரிக்கை பலகை வைத்தது. அவற்றை ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றிவிடுகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகள் சோழவரம் ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வருவாய் துறையினருடன் இணைந்து அவற்றை அகற்றவேண்டும். ஆண்டுக்கு இரு பருவங்களில் ஆக்கிரமிப்பு நீர்நிலைகளில் விவசாயம் தொடர்கிறது. மழைநீரை சேமித்து வைக்க முடியாத நிலையே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகள் மாறிக்கொண்டே இருக்கின்றனர். புதியதாக வரும் அதிகாரிகளிடம் முதலில் இருந்து, மீண்டும் புகார் கொடுக்கவேண்டிய நிலைதான் தொடர்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், உடனடியாக நீர்நிலைகளை துார்வாரி சீரமைத்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து வந்த புகார்களை தொடர்ந்து, அங்கு எச்சரிக்கை பலகைகளை வைத்தோம். தற்போது, அவை துாக்கி வீசப்பட்டு மீண்டும் விவசாயம் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. சோழவரம் ஒன்றிய மற்றும் பூதுார் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகள் சர்வே எண் ஏக்கர் வகைப்பாடு 344 - 0.86 ஏரிஉள்வாய் 342 - 0.50, குளம் 74 - 0.50, குளம் 188 - 0.67, குளம் 38 - 3.92, காட்டுவா குளம் 42 - 1.22, வாணியர் குளம் 36 - 0.54, குளம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ