ஊத்துக்கோட்டை: தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை இருப்பது குறித்து, எவ்வித எச்சரிக்கை பதாகையும் வைக்காததால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்து வருகின்றனர். ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் இடையே ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், தண்டலம், பெரியபாளையம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சென்னையில் இருந்து ஆந்திராவின், பிச்சாட்டூர், புத்துார், நகரி, ரேணிகுண்டா, திருப்பதி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள், இச்சாலை வழியே சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள இச்சாலை வழியாக, தினமும் 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. சமீபத்தில், இச்சாலை ரூ.36 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டது. இதில், ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம் உள்ளிட்ட இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டன. ஆனால், வேகத்தடை மட்டும் அமைத்து, அது குறித்து எவ்வித எச்சரிக்கை பதாகையும் அமைக்கவில்லை. இதனால், இரவு நேரத்தில் அதிகளவு விபத்து ஏற்பட்டு வருகின்றன. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் எச்சரிக்கை பதாகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.