ஆவடி: திருமுல்லைவாயில், நடேசன் தெருவில் உள்ள 'அரவிந்த் அக் ஷயம்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த 22ம் தேதி, சோழம்பேடைச் சேர்ந்த சுரேஷ், 48, மற்றும் ரமேஷ், 49, ஆகியோர், பிளம்பிங் பணி மேற்கொண்டனர்.பணியின்போது, சுரேஷ் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ரமேஷ், திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில், தேசிய துாய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர்வெங்கடேசன், சம்பவம் நடந்த இடத்தில் நேற்று முன்தம் ஆய்வு மேற்கொண்டார்.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், ஆவடி மாநகராட்சி கமிஷனர் ஷேக் அப்துல் ரஹ்மான், ஆவடி போலீஸ் துணை கமிஷனர் அய்மான் ஜமால் ஆகியோர் உடனிருந்தனர்.உயிரிழந்த சுரேஷ் குடும்பத்தினர் மற்றும் சிகிச்சையில் உள்ள ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டார்.பின், அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்தான் சுரேஷ் எப்படி உயிரிழந்தார் என்பது தெரிய வரும். இறந்தவர் குடும்பத்திற்கு, தமிழக அரசு பொது நிதியில் இருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நாட்டில் விஷவாயு தாக்கி இறப்போரில், தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த 1993 முதல் 2023 வரை, 227 பேர் தமிழகத்தில் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர்.கடந்த 20 நாட்களில், காரைக்குடியில் ஒருவர், ராஜபாளையத்தில் இருவர் என, மூவர் இறந்து உள்ளனர்.விஷவாயு தாக்கி இறப்போரில், 200 பேர் துாய்மை ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். ஊதியம் குறைவாக உள்ளதால், ஒப்பந்த தொழிலாளர்கள் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.கர்நாடகா, ஆந்திராவில் 'டைரக்ட் பேமென்ட் சிஸ்டம்' எனும் திட்டம் உள்ளது. அங்கு நிரந்தரம் மற்றும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் என்பது கிடையாது.மாநகராட்சி அல்லது நகராட்சி, அவர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்குகிறது. அங்கு தூய்மை பணியாளர்கள் 22,000 ரூபாய் ஊதியம் பெறுகின்றனர்.தொழிலாளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணமே, இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதை ஒழித்து நிரந்தர பணியாளர்களாக மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.