உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாணவர்கள் மனநிலையில் மாற்றம் வந்தால் போதையில்லா மாநிலமாக தமிழகம் மாறும்

மாணவர்கள் மனநிலையில் மாற்றம் வந்தால் போதையில்லா மாநிலமாக தமிழகம் மாறும்

பொன்னேரி:பொன்னேரி கோட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை சார்பில், நேற்று பொன்னேரி அரசு கலைக் கல்லுாரியில் 'போதை பொருட்கள் இல்லாத திருவள்ளூர்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் பிரதாப் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கல்லுாரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.அதை தொடர்ந்து, மாணவியர் வரைந்த போதையால் ஏற்படும் தீங்கு குறித்த ரங்கோலியை பார்வையிட்டார். ஒவ்வொரு ரங்கோலி குறித்தும் மாணவியரிடம் விளக்கம் கேட்டு, அவர்களை பாராட்டினார்.மாணவர்களிடம் போதை பொருட்களால் உண்டாகும் தீமைகள், போதைக்கு அடிமையானவர்களுக்கு சமூகத்தில் கிடைக்கும் அவப்பெயர், வீணாகும் எதிர்காலம் குறித்து பேசினார். மாணவர்கள் மனநிலையில் மாற்றம் வந்தால், போதையில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிடும் எனவும் தெரிவித்தார். 'அதன்பின், 'போதை பொருட்களால் ஏற்படும் தீங்குகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆட்படமாட்டேன். எனது குடும்பத்தினர், நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன்.போதை பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்டெடுப்பதில் எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிராக எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசிற்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் என்னை அர்ப்பணித்து பங்காற்றுவேன்' என உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி